Wednesday, 23 November 2016

சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!

1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.

2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!

3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.

4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.

6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.

7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.

8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.

9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.

10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.

11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.

13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.

14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.

16. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!

Tuesday, 22 November 2016

ஐயப்ப பக்தர்களின் விரத முறைகள்

...

கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலை யாத்திரைக்கான மண்டல கால விரதத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்குவார்கள். பொன்னம்பல மேட்டில் குடிகொண்டுள்ள ஐய்யப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் நீராடி மனதையும் உடலையும் தூய்மையாக்கி மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள். இப்படி விரதம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சில உள்ளன.

1)விரதம் ஆரம்பிக்கும் முன்னர் குலதெய்வம் / இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு தாயை வணங்கி அவர் கையால் மாலை அணிந்து கொள்ளலாம். இல்லையெனில் குருசுவாமி கையால் மாலை அணிந்து கொள்ளலாம்.

2)ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியால் கட்டிய மாலையை அணிய வேண்டும். துணை மாலையும் அணிய வேண்டும்.

3)விரத காலங்களில் அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும், மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.

4)விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து பாடல்கள் பாடி அவர்கள் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரண கோஷங்கள் சொல்ல வேண்டும்.

5)விரத காலம் முழுமையும் ஒரு வேளை அளவோடு சைவ உணவருந்தி, இரவில் பால், பழம் போன்ற இலகு ஆகாரங்களை உட்கொண்டு உபவாசம் இருத்தல் வேண்டும்.

6)சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலத்தில் கருப்பு, நீலம், ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.

7)விரதத்தின் போது வீட்டுக்கு விலக்கான பெண்களின் அருகாமையை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் பேசுவதையும், அவர்கள் கையால் உணவு அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.

8)விரத காலங்களில் மது, புகையிலை, சிகரெட் போன்ற பொருட்கள் லாகிரி வஸ்துகளை பயன் படுத்தக்கூடாது.

9)சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது பிரம்மச்சர்ய விரதம். எதிர்காணும் அனைத்துப் பெண்களையும் தாயாகவும் சகோதரியாகவும் எண்ண வேண்டும்.

10)பக்தர்கள் பகல் நேரத்தில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கை, தலையணை போன்ற சுக சவுகரியங்களை தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது பாய் விரித்து அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும்.

11)முறையாக விரதம் இருந்தால் தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில் மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து புறப்படும் நாளன்று மாலை அணிவதில் தவறேதும் இல்லை.

12)இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று துக்கத்தில் பங்கேற்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்களும் மலைக்குச் சென்று திரும்பும் வரை துக்கம் கேட்கக் கூடாது. தவிர்க்க இயலாத அல்லது குடும்பத்தில் ஏதேனும் இறப்பு நடந்து விட்டால் உடன் மாலையைக் கழற்றிவிட வேண்டும்.

13)எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். சாதாரணமாக சீகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.

14)பக்தர்கள் மாலை தரித்த பிறகு, ஆண்களை ஐய்யப்பா என்றும், பெண்களை மாளிகைப்புரம் என்றும், சிறுவர்களை மணிகண்டன் என்றும், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

15)48 நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே போற்றத்தக்க உத்தமமான செயலாகும். விரதமிருந்து ஐய்யப்பனை காண செல்லும் பக்தர்கள் பெருவழி எனப்படும் ஐந்து மலைகளையும்(48 மைல்) நடைப்பயணமாக நடப்பது நல்லது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணத்தால் இப்போது கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருமுடி கட்டிய பின்னர் """"சென்று வருகிறேன்"" என்ற வார்த்தை பயன்பாட்டை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், மலைக்கு சென்று தரிசனம் முடித்து திரும்பும் வரை கைப்பேசி பயன்பாட்டை தவிர்க்கவும். அவசர தேவைக்கு மட்டுமே கைப்பேசியை பயன்படுத்தலாம்.

16)சபரிமலை பயணத்தில் காலணி அணிந்து கொள்வது என்பது தங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அணிவதில் தவறில்லை.

17) 18ஆண்டுகள் சபரிமலை செல்லக்கூடிய ஐய்யப்ப பக்தர்கள் தென்னங்கன்று எடுத்துச் செல்வதை (ஒரு சாஸ்த்திர சம்பிரதாயம்) வழக்கமாக கொண்டுள்ளனர். பசுமை சபரிமலையை உருவாக்குவது ஐய்யப்ப பக்தர்களின் இலட்சியம். ஐய்யப்பமார்கள் எடுத்து செல்லும் தென்னங்கன்றுகளை சபரிமலையில் நடுவது இல்லை. எனவே, 18ம் ஆண்டு சபரிமலை செல்லக்கூடிய ஐய்யப்பமார்கள் இரு தென்னங்கன்றுகள் வாங்கி அதனை பூஜை செய்து ஒன்றினை சபரிமலைக்கும், மற்றொன்றை சபரிமலைக்கு செல்லக்கூடிய நாளில் அந்த ஐய்யப்பமார்கள் வீட்டிலோ அல்லது அவர்களது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயத்திலோ நட்டு வைத்து அதனை அவர்களது குடும்பத்தினர் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்கலாம். இதனால் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என கருதப்படுகிறது.

18)தொழிற்சாலைகளில் வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும் பொருட்டு ஷூ அணியலாம். இதில் குற்றம் எதுவும் இல்லை.

19)மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில் வீட்டிலுள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால் அதே வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையை கழற்றுவது உத்தமம். ஆனால் தாங்கள் வெளியே எங்கேயாவது தங்கியிருந்தால் மாலையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை.

20)முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐய்யப்பமார்கள் கன்னி பூஜையை அவசியம் செய்ய வேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் கடன் வாங்கியாவது கன்னி பூஜையை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. ஐய்யப்பன் அத்தகைய ஆடம்பரத்தை விரும்புவது இல்லை. தங்களால் எப்போது எவ்வளவு முடியுமோ,எப்போது இயலுமோ, வீட்டிலேயே உணவைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு சாலையோரத்தில் உள்ள மிகவும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றதை உதவலாம். இல்லையெனில் மலைக்கு செல்லும்போது உடன்வரும் ஐய்யப்ப பக்தர்களுக்கு ஒரு வேளை உணவளிக்கலாம்.

21)ஐய்யப்ப விரதத்தில் மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை. ஐய்யப்ப பூஜை என்ற பெயரில் ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூராக இருப்பது விரும்பத்தக்கதல்ல.

22)தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும் தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக் கொள்வதும் வேண்டாம்.

23)ஒருமுறை உபயோகித்த இருமுடிப்பை / போர்வை போன்றவைகளை மறுமுறை உபயோகிக்கலாம், அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இருமுடிப்பையை அது சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.

24)மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதனை அவசியம் தவிர்க்க வேண்டும்.

25)இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாக பணம் பெறுதலும், ஐயப்ப பக்தி முறைகளுக்கு புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருட்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பது தான் முறை.

26)இருமுடி தாங்குபவர்களுக்கு பூ மாலை அணிவித்து அடுத்த நிமிடமே அந்த பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டு சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.

27)சபரிமலை யாத்திரையின் போது கன்னி சாமிகள் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று.

28)ஐயப்பப் பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபட செல்லும் போது அங்குள்ள நடைமுறைகளையும், கட்டுப்பாட்டுகளையும் மதித்து நடத்தல் அவசியமானது. (உதாரணத்துக்கு குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல் அமைதியாக வழிபடுதல்).

29)சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும். சபரிமலை யாத்திரையின் போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லாவிதத்திலும் நல்லது,

30)பம்பை நதிக்கரையில் ‘பம்பா சத்யா’ எனும்அன்னதானம் செய்ய வேண்டும். சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். மாறாக ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

31)பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை மற்றவர்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல் அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் இடத்திலேயே கொண்டாடுதல் சிறப்பான செயலாகும்.

32)சன்னிதானத்தில் கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எவ்வித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோர்க்கும் நன்று.

33)கண்ணாடி பாட்டில்களையும், உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்தில் போட்டு, மற்ற ஐய்யப்பமார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தை செய்ய கூடாது. மேலும் பிளாஸ்டிக் பைகளை/ பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

34)இருமுடிக்கு பயன் படுத்தும் தேங்காய்களை அருள்மிகு ஐய்யப்பன் சந்நிதியில் கொடுத்து நெய் அபிஷேகத்திற்கு நெய் எடுத்தபிறகு, அந்த தேங்காய் மூடிகளை கற்பூர ஆழியில் போடுவதற்கு பதிலாக அன்னதானம் செய்யும் இடங்களில் தரும் பட்சத்தில், ஐய்யப்ப பக்தர்களின் அன்னதானத்திற்கு பயன்படுத்த தருவது சிறப்பு. ஐய்யப்ப மார்களின் அன்னதானத்திற்கு இந்த தேங்காய் பயன்படுவதால் ஐய்யப்பமார்களுக்கு உணவளித்த பலன் கிடைக்கும். கற்பூர ஆழி எரிந்து கொண்டிருப்பதால் கற்பூர ஆழியிலிருந்து வரும் புகை ஓசோன் படலத்தில் பாதிப்பை உள்ளாக்குவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும்.

35)சபரிமலை யாத்திரை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்த பிறகே மாலையைக் கழற்ற வேண்டும். பம்பையிலோ நடுவழியிலோ மாலையைக் கழற்றக் கூடாது.

40)ஐய்யப்பன் வழிபாட்டை ஆவேசத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல் அமைதியாகவும், சாத்வீகமாகவும் இந்த விரதத்தை ஆண்டுதோறும் நாம் கடைபிடித்தால் ஓய்வில்லாமல் வாழும் நமக்கு ஓய்வு, மன அமைதி, ஆத்மபலம், நற்சிந்தனை ஆகியவை கிடைக்கின்றன.

சபரிமலை செல்வோம் சந்தோஷம் பெறுவோம்.

Monday, 31 October 2016

காவல் தெய்வமான கருப்பசாமிவரலாறு!

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக இருக்கக்கூடும்!

வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல், தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில். கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு. நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம். கருப்பசாமியின் மனைவி கருப்பழகி(கருப்பாயி); மகன்- கண்டன்; அண்ணன்-முத்தண்ண கருப்பசாமி; தம்பி- இளைய கருப்பு; தங்கை- ராக்காயி.

ஐயன் ஐயப்பனும் கருப்பரும்: ஸ்ரீஐயப்பனுக்கும் கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் கருப்பர் திருத்தாண்டகத் தின் முதல் பாடல் சொல்கிறது.

மலையாளத் துரையானை என்னுள்ளத்தில்
வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே!
என்கிறது அந்தப் பாடல் வரி.

கத்தப்பட்டு அருள்மிகு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தொட்டியத்து கருப்பையா போற்றிப் பாடலின் இரு வரிகள்....

மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி
மக்கள் போற்றிடும் மன்னவா போற்றி.. எனப் போற்றுகின்றன!

பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மெய்சிலிர்த்துப் பாடும் பாடல்களிலும் கருப்பசாமி வருவார்!

பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு
வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடு

எனத் துவங்கி கருப்பரைப் போற்றுகிறது, மொட்டையக்கோனார் என்பவர் எழுதிய... பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு பாடல்!

ஸ்ரீதச மகாவித்யா எனும் நூலாசிரியர் திருவெண்காடு ஏ.கே.முத்துசாமி சாஸ்திரிகள். மகா காளன் என்ற கருப்பண்ண சுவாமி, பூதநாதனாகிய மகா சாஸ்தாவின் அன்புக்குரிய கணநாதன். சாஸ்தாவின் ஆணையை சிரமேற்கொண்டு, அவரது எண்ணங்களைப் பூர்த்தி செய்பவர் என்கிறார்.

பதினெட்டாம்படி கருப்பர்: சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புõரணங்களில் உண்டு. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன். அவனது படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய் எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார், முந்திரி நைவேத்தியமும் கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம் ஐயனைத் தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 ஆம் படிகளில் ஏறுவார்கள். சரி சாஸ்தாவின் சித்தத்தை ஆணையை நிறைவேற்றும் இவரை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றெல்லாம் போற்றுவர்.

காவல் தெய்வம் கருப்பண்ண சாமி!

கண்கண்ட தெய்வமாம் கருப்பர் பூஜைக்குச் சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். பூஜையில் அமர்ந்ததும் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம்; நாள் நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்துப் பூஜையைத் தொடங்க வேண்டும், முன்னதாக சற்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கருப்பசாமி தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம், ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ எனக் கூறி வழிபடலாம் நிறைவாக நைவேத்திய சமர்ப்பணம்.

இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ஸ்ரீமந் நாராயணனும் சிவபெருமானும் பரம்பொருள். சுத்த தெய்வம். சம்ஹார ஆகாரங்கள் வைத்து பூஜிக்கவே கூடாது. மது-மாமிசம் அனைத்தும் காமியார்த்தத்தில் உள்ளவை. துன்பம் கொடுப்பவை. உதாரணமாக ஓர் ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ வெட்டினால் அந்த உடலிலிருந்து உயிர் பிரிகிறது. எந்த அளவுக்கு துன்பப்பட்டு அந்த ஜீவன் பிரிகிறதோ, அதைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு துன்பம் கொலை செய்தவனுக்கு வந்து சேரும். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. கருப்பணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள்-சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைக் கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.

தியான ஸ்லோகம்

த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்
கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நும:

Thursday, 26 November 2015

பெரிய பாதையின் மஹத்துவம்

சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.

பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரியாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.

ஸாக்ஷாத் பகவான் மணிகண்டன் தன் மனித அவதார காலத்தில் பரிவார கணங்கள் சூழ தங்கிச் சென்ற பாதையாதலால், பெரிய பாதையில் ஒவ்வொரு கல்லுக்கும் கூட மஹத்துவம் உண்டு. பண்டைய வழக்கப்படி இந்த பெரிய பாதையில் ஒவ்வொரு முக்கியமான கேந்த்ரங்களிலும் இருமுடியை இறக்கி வைத்து, அங்குள்ள பூதகணங்களுக்கும், தேவதைகளுக்கும் பூஜைகள் நடத்திய பிறகே புறப்படும் வழக்கம் இருந்தது.

ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு ஆம்னாய தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும். அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குருஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை. (இன்றும் அந்த விதி பொருந்தும்)

பெரிய பாதையில் அமைந்திருக்கும் முக்கியமான சில முக்கியமான, புனிதமான கேந்திரங்கள் உண்டு. நமக்கு ஆன்மீக எழுச்சியை உண்டு பண்ணக்கூடிய வல்லமை அந்த இடங்களுக்கு உண்டு.

1. எருமேலி

2. பேரூர் தோடு

3. காளைகட்டி

4. அழுதை

5. அழுதை நதி

6.கல்லிடுங்குன்னு

7.இஞ்சிப்பாறை - உடும்பாறை

8.முக்குழி

9.கரிவலாம் தோடு

10. கரிமலை

11. வலியானை வட்டம்

12.செரியானை வட்டம்

13. பம்பா நதி

எருமேலி

அத்தனை பக்தர்களும் கூடும் இடம் எருமேலி. மஹிஷியை கொன்று வீசிய இடம் - மஹிஷிமாரிகா வனம் என்ற பண்டைய புராணங்கள் போற்றும் இடம். பின்னர் எருமைக்கொல்லியாகி எருமேலியாகி உள்ளது. முதலில் பேட்டை சாஸ்தாவை வணங்க வேண்டும். ஐயப்பன் போருக்கு வனம் புகுந்ததை நினைவு படுத்தும் முகமாக பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. 

எருமேலியில் மேற்கு பகுதியில் கிராத ரூபத்தில் சாஸ்தா ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இங்கு  கிராத சாஸ்தாவை த்யானித்து,  அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவக்க வேண்டும். 

அதன் முன்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தக்ஷிணை தந்து நல்லபடியாக பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்ட வேண்டும்.

மசூதிக்கு சென்று வணங்கும் வழக்கம் பண்டைய வழக்கம் இல்லை. (முன்பிருந்த வாபுரக் கோஷ்டமும் இப்போது காணப்படவில்லை... எனவே) கோட்டைப்படியில் மஹாகணபதியையும் பேட்டை சாஸ்தாவின் ஆலயத்திலேயே சிவபூதமான வாபுரனையும் மானசீகமாக வணங்கி வனத்துள் செல்ல வேண்டும்.

2. பேரூர் தோடு

தோடு என்றால் நீர்நிலை. பெரியபாதையின் முதல் தாவளம் - தங்குமிடமும் இதுதான். இங்கிருந்து தான் ஐயப்பனின் உண்மையான பூங்காவனம் துவங்குகிறது. முறையான விரதம் இல்லாதவர்கள், இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம்.

பண்டைய காலத்தில் வெளிச்சப்பாடின் உத்தரவு பெற்றால் மட்டுமே பெரியபாதைக்குள் நுழைய முடியும்.  கொட்டாரக்கரை ஹரிஹரய்யர் காலத்துக்கு முன்பு வரை, வெளிச்சப்பாடு விபூதி ப்ரஸாதம் தந்தால் மேற்கொண்டு யாத்திரையை தொடரலாம். அல்லாமல் அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டாரானால் வீட்டுக்கு திரும்பி விட வேண்டியது தான்.

யாத்திரைக்கு அனுமதியில்லாத பக்தர்கள் யாத்திரைக்கு வரும் ஐயப்பன்மார்களை, பேரூர் தோட்டில் வணங்கி விடைபெறுவர்.

வனதேவதைகளும், பூதகணங்களும், வன்மிருகங்களும் - இந்த விரத மகிமைக்கு மட்டுமே கட்டுப்பட்டு பக்தரை தொந்தரவு செய்யாமல் இருக்கிறார்கள்.

3. காளைகட்டி

காளைகட்டி ஆஸ்ரமம் என்றே இந்த இடத்துக்குப் பெயர். பலரும் சிவபெருமான் நந்தியைக் கட்டி வைத்த இடம் என்று கூறுவதுண்டு; ஆனால் அது சரியல்ல; (நந்தியென்ற உயர் சிவ கணத்தை கட்டி வைக்க வேண்டுமா? ஓடிப்போக அவர் என்ன நம் வீட்டு காளையா?)

உண்மை என்னவென்றால், இந்த இடத்தின் அதிஷ்டான தேவதை நந்திகேச்வரன்; சைவ தர்ம சுரக்ஷிதனான சாஸ்தாவின் கணங்களில் அவரும் ஒருவர். எனவே அவரை வணங்கி அவரது அனுமதியுடன் யாத்திரையை தொடர வேண்டும்.

4, 5. அழுதையும் அழுதை நதியும்

”பந்தள பூபபாலன் கருணா வருணாலயன் அலஸையில் விலஸும் ஈசன்” என்று ஐயப்பன் போற்றப்படுகிறான். அலஸா என்று அழைக்கப்பட்ட நதியே இன்றைய அழுதை நதி.

பம்பையின் ஒரு கிளை நதியான அழுதையில் ஸ்நாநம் செய்து அழுதை மலையை ஏறிக் கடக்க வேண்டும். அழுதையில் முழுகிக் கல்லை எடுத்துக் கொண்டு மடியில் காப்பாற்றி வைப்பது வழக்கம்.

அழுதை ஸ்னானம் செய்து இருமுடியை தலையில் வைக்கும் முன்பு குருநாதரை வணங்கி தக்ஷிணை கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும்.

6. கல்லிடும்குன்னு

கல்- இடும் - குன்னு என்றால் கல்லை இடும் குன்று. அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் இது தான். அழுதா மலையை ஏறி முடித்த பின்னர் மேட்டுப் பகுதியில் கற்களை விடுக்கிறார்கள். நன்மைக்கும் தீமைக்குமான நெடும் போராட்டத்தில் நம்மாலான பங்காக தீமையை அழிக்க ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது.

பண்டைய காலங்களில் ஆத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவர்கள் இங்கு சிறப்பாக பூஜைகள் நடத்தி லீலாவதிக்கு ஆராதனை செய்யும் வழக்கம் இருந்தது. (இப்போது அப்படி எதுவும் நடப்பதில்லை)

7. உடும்பாறை இஞ்சிப்பாறை

அழுதாமேட்டை தாண்டி வடக்குப்பக்கம் சென்றால் வருவது உடும்பாறைக் கோட்டை. இங்கு சிலர் இரவில் தங்குவதும் உண்டு. இங்கு ஸ்ரீ பூதநாதரின் ஸாந்நித்யம் நிலை பெற்றிருப்பது கண்கூடு. ஸமஸ்த பூத கணங்கள் சூழ இங்கு அவர் வ்யாக்ரபாதன் என்ற பெயரில் இங்கு வசிக்கிறார். இரவு நேரங்களில் பூதத்தானின் சங்கிலி சத்தமும் கேட்பதுண்டு.

ஸ்ரீபூதநாதருக்கென விசேஷமான ஓர் பாறையும் அங்கே பகவானுக்கென விசேஷமாக ஆழி பூஜையும் நடத்துவது மரபு. இந்த ஆழியின் சாம்பலே ப்ரசாதமாக வழங்கப்பட்டது (மரங்களையும் தேங்காயையும் கொண்டே ஆழி நடத்துவது பண்டைய வழக்கம் இது பொதுவாகக் காணப்படும் கற்பூர ஆழியிலிருந்து மாறுபட்டது.) பார்வதீபுரம் வெங்கடீச்வர ஐயர் காலம் வரை தடங்கலின்றி நடைபெற்ற ஆழி பின்னர் பல காரணங்களால் தடைபட்டு பூதப்பாண்டி ஸ்ரீ ராமநாத வாத்யாரின் காலத்தில் வலியானைவட்டத்தில் தொடர்கிறது.

(பெரியபாதையை பெரிதும் மாற்றி அமைத்த காரணத்தால் சென்றமுறை வழக்கமான  பாறையையும் காண முடியவில்லை)

இங்கே பூதநாதரை வணங்கி பானகம் நைவேத்யம் செய்வது வழக்கம்.

இங்கிருந்து சற்றே அருகில் அமைந்திருப்பது இஞ்சிப்பாறைக் கோட்டை. இங்கு சாந்நித்யம் கொண்டிருப்பது தேவி. (த்வரிதா தேவி என்றும் கொள்வதுண்டு)

8 முக்குழி 

இறக்கத்தின் முடிவாக வந்து சேரும் இடம் முக்குழி. சிலர் அழுதை மலை ஏறாமலே அரையக்குடி வழியாக சுற்றி முக்குழி வந்து சேர்வதும் உண்டு. (கல்லிடும்குன்னும், உடும்பாறையும் காணாத காரணத்தால் இது இரண்டாம் பட்சமே என்று கூறுவோரும் உண்டு)

இங்கு பத்ரகாளியின் சாந்நித்யம் உண்டு. இங்கு தேவிக்கு குங்குமார்ச்சனை நடத்தி குருதி படைக்கும் வழக்கமும் உண்டு. இப்போது நல்லதொரு கோவிலும் அமைந்துள்ளது.

இங்கிருந்து ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் நடந்து கொண்டே இருந்தால் அடையுமிடம் கரிவலம் தோடு.

9. கரிவலம் தோடு

கரி என்றால் யானை. யானைகள் தண்ணீர் அருந்த வலம் வரும் பகுதியே கரிவலம் தோடு. புதுச்சேரி ஆற்றைக் கடந்து அடையும் இடம்.

இது சற்றே இளைப்பாறுவதற்க்குரிய இடம் மட்டுமேயன்றி தங்குவதற்குரிய இடம் அல்ல.

பயமுறுத்தும் கரிமலைக்கு கொஞ்சம் தயார் படுத்திக் கொள்ள உதவுமிடம் இது.

பண்டைய குருமார்கள் யாரும் கரிவலந்தோட்டில் இரவு நேரம் தங்க அனுமதிப்பதில்லை. (இன்று பலரும் அங்கே தாவளம் போடுகிறார்கள்; அது சரியல்ல)

10. கரிமலை

யானைகளின் சரணாலயமாக அறியப்படுவது கரிமலை; கரிமலை ஏறுவதற்கு முன்பு அடிவாரத்திலுள்ள கணபதிக்கல்லை வணங்கிச் செல்லுதல் வேண்டும். கரிமலையின் அதிஷ்டான தேவதை பகவதியாதலால் அடிவாரத்திலேயே வனமஹாகாளியின் சாந்நித்யமும் உள்ளதாக கூறப்படுவதுண்டு. சிலர் ஒரு குறிப்பிட்ட கல்லில் காளி ஸஹஸ்ரநாமத்தால் ஆராதிப்பதும் உண்டு.

நெடுங்குத்தாக நிற்கும் கரிமலை ஏழு அடுக்குகளைக் கொண்டது. பக்தர்களின் விரத பலத்தையும் ப்ரம்மச்சர்ய பலத்தையும் சோதிக்கும் இடம் கரிமலை என்று நம்பப்படுகிறது. மேலும் அவரவர் மனத்தின் உண்மைகளை வெளிக்கொணரும் இடமாகவும் இது இருப்பது கண்கூடு. மேலும் இது ஸத்ய பீடமாதலால் அனாவசியமான பேச்சுக்களையோ சண்டை சச்சரவுகளையோ அடியோடு தவிர்க்க வேண்டும். கரிமலை உச்சியில் வைத்து சொல்லும் ஒவ்வொன்றும் சத்தியமாகும். இங்கே அவரவர் குருமார்களை வணங்கி நல்வாக்குகளை ஆசிகளாக பெற்று உய்யுதல் நலம்.

கரிமலை நாதனையும் வணங்கி நாழிக்கிணற்று நீரைப் பருகி சற்றே இளைப்பாறி கரிமலை இறங்க வேண்டும்.

கரிமலை ஏற்றமும் இறக்கமும் ஒரு மனிதனை ஸ்புடம் போடக்கூடிய தன்மை கொண்டது. அதுவரை சரணம் கூப்பிடாதவனையும் சரணம் சொல்ல வைக்கும் வல்லமை அதற்கு உண்டு. முறையாக விரதம் இருந்து கரிமலை ஏறி இறங்குபவனிடம் பகவான் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அவனது துன்பத்தைத் துடைத்துச் செல்கிறான் என்பது பண்டைய பக்தர்களின் அனுபவம்.

11, 12, 13. வலியானை வட்டம், செறியானை வட்டம் - பம்பை

பம்பை என்று இன்று குறிப்பிடப்படும் பகுதி உண்மையான பம்பையல்ல ! இதுவும் பம்பையாறுதான் என்றாலும், வண்டிகள் மிகவும் பெருகிய  பிற்காலத்தில் உருவானதுதான் இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம் அமைந்துள்ள பம்பைப்பகுதி. பண்டைய காலத்தில் வெலியானைவட்டத்தையொட்டி அமைந்துள்ள பகுதியே பம்பை. 

கரிமலை உச்சி தொடங்கி பம்பை வரை கருப்பனின் சாந்நித்யம் உள்ளதென்பது பல பக்தர்களின் அனுபவம். அதனால் வலியானை வட்டத்தில் தேங்காயில் கருப்பனை ஆவாஹித்து பூஜிக்கும்  வழக்கமும் உண்டு.

கரிமலையின் இறக்கத்தின் முடிவே வலியானைவட்டம். இங்கிருக்கும் பம்பை தேவகங்கைக்கு ஸமமானது. 

பகவானின் காலடி பட்ட இந்த புண்ணியபூமிக்கு நிகராக உலகில் வேறெங்கும் காணமுடியாது என்பது ஸத்தியம். பகவான் சாஸ்தாவின் வரவுக்காக சனகாதி ரிஷிகள் தவமியற்றிக் காத்திருந்த இடம். இன்றும் பலப்பல மஹான்களும், ஞானிகளும் கண்ணுக்குத் தெரியாமல் தவம் செய்யும் இடம் இந்த வலியானைவட்டம்.  இந்த காரணத்தால்தான் பல குருமார்கள் இங்கு தங்கி பூஜைகள், ஹோமங்கள், அன்னதானங்கள், பம்பா ஸத்தி, பம்பா விளக்கு என என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்தார்கள். 

பூதப்பாண்டியாரின் ஆழியும், புனலூர் ஸுப்ரமண்ய ஐயரின் தீவுத் திடலும், நீலகண்ட ஐயரின் மரமும், ஸமூக சாஸ்தா ப்ரீதியும் வலியானைவட்டத்தில் இன்றளவும் பேசப்படுகின்றன.

இங்கு நடத்தப்படும் அன்னதானத்தில் ஐயப்பனே நேரடியாக ஏதாவது ஒரு உருவத்தில் வந்து பங்கு கொள்கிறான் என்ற காரணத்தால், இங்கு அன்னதானத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம்.

இங்கே எந்த விரிக்கு யார் வந்தாலும் ஐயப்பனே வந்ததாகக் கருதி அன்னதானம் செய்ய வேண்டும். (முன்பெல்லாம் 108 விரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் அடுப்புச் சாம்பலை சேகரித்து பிரசாதமாக கொண்டு வரும் வழக்கம் இருந்தது)

இங்கே ஸ்னானம் செய்து அனுஷ்டானங்களை முடித்து குருவுக்கு தக்ஷிணை தந்து வணங்கி கட்டெடுத்து யாத்திரையை தொடர வேண்டும்.

பின்னர் சபரி பீடத்தில் அம்பிகையையும், ஐயப்பனையும் வணங்கி, விரதத்தில் ஏதும் குறைகள் இருப்பின் மன்னிக்கும்படி ஸமஸ்தாபராதம் கேட்டு சரங்குத்தியை வணங்கி பதினெட்டாம்படியை அடைய வேண்டும். கடுத்தனௌயும் கருப்பனையும் வண்ங்கி உத்தரவு பெற்று, தேங்காய் உடைத்து ஸத்யமான பதினெண்படிகளில் ஏறுதல் வேண்டும்.

பகவானின் தரிசனம் கண்டு, நெய்யபிஷேகம் முடித்த பின்னர், மீண்டும் குருவுக்கு தக்ஷிணை தந்து அவர் கையால் அந்த பிரசாதத்தை பெறுதல் வேண்டும். பிரசாதத்தை இருமுடியில் வைத்து இருமுடியை சுமந்தபடி கீழே இறங்க வேண்டும்.

முத்ரை மாலையை எக்காரணம் கொண்டும் வழியிலேயே கழற்றலாகாது; பிரசாதங்களை வீட்டில் கொண்டு வைத்து, தீபாராதனை செய்து, மாலையிட்ட குருநாதரை வணங்கி மாலையை அவர் மூலமாகவே கழற்றி, பிரசாதங்களை தானும் ஸ்வீகரித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

ஐயப்பனின் யாத்திரையில் நியமங்களும் கட்டுப்பாடுகளும் மிகவும் முக்கியம். முறையான சடங்குகளும் ஸம்ப்ரதாயங்களும் நம் பெரியோர் உருவாக்கித் தந்துள்ளார்கள்.

இதை எவ்வளவும் சிரத்தையுடன் முடியுமோ அவ்வளவு நம் சக்திக்கு உட்பட்டு கடைபிடிப்போமாயின் ஐயன் ஐயப்பனின் பேரருள் கட்டாயம் உண்டு என்பதில் ஐயமில்லை !

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !