Wednesday, 25 November 2015

ஆர்யனின் பிறப்பு

விரைவில் இளவரசி கருவுற்றாள். மிகச் சரியாக 14-01-1095ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. சபரிமலை ஐயப்பனின் அருளால் பிறந்த குழந்தை என்பதனால், அக்குழந்தைக்கு "ஆர்யன்" என்ற பெயர் சூட்டினார்கள்.  (ஆர்யன் என்பது சாஸ்தாவின் நான்கு முக்கியமான பெயர்களில் ஒன்று; மரியாதைக்குரியவன் என்று பொருள்). தன் லட்சியத்தை நிறைவேற்றப் போகும் தவப்புதல்வன் என்ற எண்ணத்தில் ஜயந்தன், மிகச்சிறிய வயதிலேயே தன் மகனுக்கு ஆன்மீகம், அரசியலோடு, போர்க்கலைகளையும் கற்றுக் கொடுத்தான். ஆச்சர்யப்படும் விதத்தில், பாலகனான அச்சிறுவன் ஆன்மீக அறிவில் அபரிமிதமான ஞானத்துடனும், அதே சமயம் சண்டைப்பயிற்சியில் வெல்ல முடியாத வீரனாகவும் விளங்கினான். ஆர்யன் ஒரு சாமான்ய பிறவியல்ல என்பதை அவன் தாய் தந்தையர் வெகு விரைவில் உணர்ந்து கொண்டார்கள்.

இனியும் அவனை இந்த காட்டில் வைத்திருப்பது சரியாகாது என்று முடுவெடுத்த ஜயந்தன், பந்தள மன்னனுக்கு ஒரு கடிதம் எழுதி, ஆர்யனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். ஆர்யனின் மாமனான பந்தள மன்னன், கடிதத்தில் வாயிலாக எல்லா உண்மைகளையும் அறிந்தான். இறந்து விட்டதாக கருதிய தன் சகோதரி இன்னும் உயிருடன் இருப்பதையும், அவள் பிள்ளை கண்முன் வந்திருப்பதையும் கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டான். ஆர்யனின் தோற்றப் பொலிவே அபாரமாக இருந்தது; யாருக்கும் அவன் சிறுவன் என்ற எண்ணமே தோன்றவில்லை. மாறாக மரியாதையே ஏற்பட்டது. அரண்மனையிலேயே தங்கிய ஆர்யன், அரண்மனை வீரர்களையும் மல்லர்களையும் சர்வசாதாரணமாக வென்றது மன்னரிடத்தில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. தன் படையின் முக்கியமான தலைமைப் பொறுப்பினை ஆர்யனுக்குக் கொடுத்தான் மன்னன்.

ஆர்யன் - கேரள வர்மன் 

அரண்மனையின் வளர்ந்து வந்த ஆர்யன், தன் செயற்கரிய செயல்களால் அனைவர் மனத்தையும் வென்று விட்டான். அரசனும், தனக்கு பிறகு பந்தள நாட்டை ஆளும் தகுதி ஆர்யனுக்கே உள்ளது என முடிவு செய்து, அவனையே இளவரசனாக அடையாளம் காட்டினான். அரச ப்ரதிநிதியாக நாட்டை ஆளும் பொறுப்பையும் அனைத்து அதிகாரங்களையும் ஆர்யனுக்கே அளித்தான். அத்துடன் அரச அதிகாரம் கொண்டவன் என்ற முறையில் "கேரள வர்மன்" என்ற அரச பட்டத்தையும் அளித்து, "ஆர்ய கேரள வர்மன்" என்று போற்றினான். மக்கள் அனைவருக்கும் எளியனாக விளங்கிய ஆர்யனை, எல்லோரும் ஐயன் - ஐயப்பன் என்றே செல்லமாகவும், மரியாதையாகவும் அழைத்தார்கள். (இது ஏற்கனவே சபரிமலையில் உள்ள தர்மசாஸ்தாவின் மற்றொரு பெயர்தான். அந்த காலகட்டத்தில் ஐயப்பன் என்பது ஒரு செல்லப்பெயர்)

அரசாட்சியில் முழுமையாக ஈடுபட்டு நாட்டை செம்மை படுத்திய ஐயப்பன், அவ்வப்போது சபரிமலைக் காட்டுக்குத் தனிமையை நாடிச் சென்று, தன் பிறவியின் லட்சியத்தை எண்ணி த்யானம் செய்து பொழுதை கழிக்கலானார்.

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!
ஆம் - பதினெட்டு என்பது;வரலாற்றில், புராண இதிகாசங்களில் குறிப்பிடத்தக்க ஒரு எண்ணாகவே இருந்திருக்கிறது. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் - இராமாயணப் போர் பதினெட்டு மாதங்கள் - தேவாசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள்  என்று பதினெட்டு என்ற எண்ணுக்குப் பெருமை  உண்டு. 


காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்
ஐயப்பன் கோயிலில் உள்ள 18படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.
1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு7.ரங்கநாதர் 8.காளி 9.எமன்10.சூரியன் 11.சந்திரன்12.செவ்வாய் 13.புதன்14.குரு(வியாழன்) 15.சுக்கிரன்16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய,பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா?மனம் பக்குவம் அடைய வேண்டாமா?  பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம்,புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான,தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய்,  வாய்,  கண், மூக்கு,  செவி  இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம்,விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு,மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி,இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

உதயணன்

இந்தக் கதை வரலாற்று பூர்வமானது; நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்... உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக
இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து,
கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருந்தான். ஒருசமயம் சபரிமலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவனால் முடியாமல் போகவே, அங்கிருந்த ஒரு மாந்திரீகரிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அவர், சபரிமலையில்  தர்மசாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனின் கோயில் இருப்பதாலும், அதன் அபார சக்திதான் அந்தக் கிராமத்தைக் காத்து வருவதாகவும் கூறினார்.

அதனால் வெகுண்டெழுந்த உதயணன், எப்படியாவது அந்தக் கோயிலை நாசப்படுத்தி,
கோயிலையும் கொள்ளையடிப்பேன் என்று சபதம் செய்து, அவ்வாறே சபரிமலைக் கோயிலை
தீக்கிரையாக்கி நாசப்படுத்தினான். தடுக்க வந்த கோயில் நம்பூதிரியைக் குத்திக் கொலை செய்தான். தனது அப்பா உதயணனால் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நம்பூதிரியின் மகன் ஜெயந்தன், மீண்டும் சபரிமலைக் கோயிலை
எடுத்துக் கட்டுவேன் என்றும், உதயணனைப் பழிவாங்குவேன் என்றும் சபதம் செய்தான்.
உதயணனே அறியாமல் அவனது கொள்ளைக் கூட்டத்திலேயே போய்ச் சேர்ந்தான் ஜெயந்தன். இதற்கிடையில் உதயணனுக்கு பந்தள ராஜாவின் சகோதரியைத் திருமணம் செய்துகொண்டு, தனக்கு ராஜமரியாதை வரவேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே அவன் ராஜகுமாரியைத் திருட்டுத்தனமாகத் தூக்கிவந்து விட்டான். தன்னுடன் வந்த
ஜெயந்தனிடம் ராஜகுமாரியை பத்திரமாகத் தனது இருப்பிடத்தில் கொண்டுபோய் விடுமாறும், தான் மேலும் கொள்ளையடித்துவிட்டு வருவதாகவும் கூறி, உதயணன்
சென்று விட்டான்.

இந்நிலையில் ஜெயந்தன் ராஜகுமாரியிடம் தனது சபதத்தைக் கூறினான். ராஜகுமாரியும் தனக்கு உதயணனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்றாள்.

ஜெயந்தனையே திருமணம் செய்துகொண்டு, சபரிமலைக் கோயிலைப் புதுப்பிக்க தானும்
உதவிசெய்யப் போவதாகக் கூறினாள். அவள் விருப்பப்படி ஜெயந்தனையே திருமணம்
செய்து கொண்டாள்.

கலியுக தெய்வம்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற புகழுடைய இந்த
பூமிக்கு கிடைத்த கலியுக தெய்வம் ஐயப்பன். நம்பியவர்களுக்கெல்லாம்
நல்வாழ்வை அள்ளித்தரும் வரதன். ஐயப்பனை வார்த்தையால் விளக்கிச் சொல்ல முடியாது - ஐயப்ப பக்தியை அனுபவித்தாலே புரியும்.

தமிழகமெங்கும், தர்மசாஸ்தா, அய்யனார், பதினெட்டாம்படி கருப்பு என்று வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டாலும், சாஸ்தாவுக்கு உரிய தலம் கேரளாவில்தான் அமைந்திருக்கிறது. பம்பையில் நீராடி பெரிய பாதையில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று ஒவ்வொரு ஐயப்ப பக்தருக்கும் ஆசை இருக்கும். மகர ஜோதியை தரிசிப்பது மிக முக்கியமானது.

மணிகண்டனுக்கு எல்லா ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் வித்தியாசம் பாராட்டாமல்
பக்தர்களாக இருமுடி ஏந்தி வருகிறார்கள். கரையாத மனங்களிலும் பக்திரசத்தை பெருகச் செய்து கரைத்து ஆட்கொண்டு விடுகிறான் ஐயப்பன். தன்னுடைய பெயரையே தன் பக்தர்களுக்கும் கொடுத்த ஒரே தெய்வம் ஐயப்பன் தான்.

தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்காக சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளும் விரதங்கள் ஒரு மண்டல காலத்துக்குள் அவர்களை பக்தியில் திளைத்துக் கரைகண்ட முனிவர்களுக்கு ஈடாகவே ஆக்கிவிடுகிறது. சிலர் மாதந்தோறுமே விரதம் இருந்து ஐயப்ப தரிசனம் செய்வது உண்டு. ஐயப்ப பக்தியில் காணப்படும் சில விசேஷ அம்சங்கள் நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகின்றன.

சபரி மலைக்கு மகர ஜோதி தரிசிக்கச் செல்லும் பக்தர், முதலில் மாலை அணிந்து கொள்கிறார். ஹரிஹர சுதனான ஐயப்பனுக்காக அணியும் இந்த மாலை பரமசிவனுக்கான ருத்ராட்சமாகவோ, மகாவிஷ்ணுவுக்கு உகந்த துளசி மாலையாகவோ இருக்கலாம். மாலை அணிந்த பின் என்ன ஆச்சரியம்! அந்த பக்தரின் கண்முன் தென்படுவது அத்தனையும் ஐயப்ப ‘சாமி’யாகவே ஆகிவிடுகிறது. மாலை போட்டுக்கொண்டவர் பொருளாதார ரீதியாகவும் வயதிலும் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் அவரையும் மற்றவர்கள் ‘சாமி, சாமி’ என்று மரியாதையாக அழைக்கிறார்கள். எல்லாமே அந்தக் கடவுள் வசிக்கும் இடம் என்று இதைவிட எளிதாக காட்ட ஓர் வழியும் உண்டோ!

மாலை போட்டுக் கொண்டவர் சிந்தனை, சொல், செயல் எல்லாவற்றிலும் மிகுந்த
கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு மண்டல காலம், அதாவது
நாற்பது நாட்கள், ஒருவர் உண்மையிலேயே இருப்பாரானால் அவர் இயல்பாகவே இறைச்
சிந்தனையும் ஒழுக்கமும் கொண்டவராக மாறிவிடுவார். தற்காலத்தில் ஒரு வாரம், இரண்டு வாரம் என்றெல்லாம் விரதமிருந்து செல்கிறார்கள். கேட்டால் ‘அந்த
வழியில் போகத்தான் 40 நாள் விரதம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். விரதம்
என்பது தவமும்கூட. அந்தத் தவம் நம்மை மேம்பட்ட மனிதர்களாக்க வேண்டும். அவ்வாறில்லாமல் மலையிலிருந்து திரும்பிய உடனே நாமும் நம் பழைய வழிகளுக்குச் சென்றுவிடுவோமானால் அந்த விரதம் நம்மை மாற்றவில்லை, நம்முள்
இருக்கும் இறைத்தன்மையை நாம் கண்டடையவில்லை என்று பொருள்.
இந்திய ஆன்மீக சிந்தனையில், சைவமும் வைணவமும் இரு பெரும் நதிகளாகப் பொங்கிப் பிரவகிக்கின்றன. ஒரே இறைவனை அதாவது பிரம்மத்தை சிவமயமாகவும்,
விஷ்ணு மயமாகவும் இரு வண்ணங்களில் நமது ஆன்மீக முறைகள் சித்தரிக்கின்றன.
இந்த இரு பெரும் நதிகளின் சங்கமமாக ஐயப்பன் இருக்கிறான். சைவ வைணவ பக்தியை இணைய வைத்து, ஆன்மீக முழுமையை ஏற்படுத்துகிற தெய்வம் ஐயப்பன்தான்.

பகவான் ஐயப்பனின் அவதாரம், ஸ்ரீமத் பாகவதத்தில் எட்டாவது காண்டத்தில்,
பரம சிவன், மோஹினி அவதாரத்தில் இருக்கும் மகா விஷ்ணுவைப் பார்த்து
மயங்குவதில் தொடங்குகிறது. இப்படி பரமசிவனுக்கும் மோஹினிக்கும் பிறந்த
குமாரன் தர்ம சாஸ்தா. தர்ம சாஸ்தாவின் அவதாரம்தான் மணிகண்டன். மகிஷாசுரனின் சகோதரியான மகிஷியை அழிக்க இந்த மண்ணில் வந்து சாஸ்தா ஐயப்பனாக அவதரித்தார். தர்ம சாஸ்தாவுக்குப் பூரணை, புஷ்கலை என்று இரண்டு
மனைவியர். ஆனால் ஐயப்பனுக்கு மனைவியர் இல்லை. எப்படி ராமன் ஏக பத்தினி விரதனாகவும், கிருஷ்ணன் பகுபத்னி பாவத்தையும் வெளிப்படுத்துகிறார்களோ, அதே
போலவே தர்ம சாஸ்தாவும், ஐயப்பனும் இருக்கிறார்கள். இதனாலேயே ஐயப்ப
பக்தர்கள், விரத காலத்தில் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்கிற
கட்டுப் பாடுகள் இருக்கின்றன.
பகவான் கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையைப் போல, சாஸ்தாவின் அவதாரமான ஐயப்பன், தன்னை வளர்த்த தந்தையான பந்தள நாட்டு அரசனுக்கு, மோக்ஷத்தை அடையும் விதமாக உபதேசித்தவைகள் “பூதநாத கீதை” என்ற பெயருடன் விளங்குகிறது.
பக்தி மார்க்கம் மட்டும் அல்லாமல், யோக மார்க்கத்திலும் ஐயப்பனுக்கு தொடர்பு உண்டு. பகவான் ஐயப்பன் அமர்ந்திருக்கும் நிலைக்கு யோகத்தில்
என்றும் இளமையை தக்க வைக்கக் கூடிய ஆசன முறை என்று கூறுவர்.
நமது இந்து மத ஆன்மீகத்தில், பக்தியை காதலாக கொள்ளுவது புதிதல்ல.
கண்ணனுக்கு ஆண்டாளைப் போல, ஐயப்பனைக் காதலித்த பெண் உண்டு. ஐயப்பனுக்கு தற்காப்பு, போர் கலைகள் கற்றுக் கொடுத்த குருவிற்கு லீலா என்ற பெயருடன் ஒரு மகள் இருந்தாள். சிறு குழந்தையாக இருந்த போதிருந்து ஐயப்பன் மீது காதலும் பக்தியும் கொண்டிருந்தாள். ஆனால் நித்ய பிரம்மச்சாரியாக இருக்க நினைத்த ஐயப்பன் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லை. என்றைக்கு
கன்னிச்சாமியாக (முதல் முறை வரும் ஐயப்ப பக்தர்) ஒருவர் கூட வரவில்லையோ அன்று திருமணம் செய்வதாக ஐயப்பன் வாக்கு கொடுத்ததாகவும், அதன் பின், அந்த
பெண் சபரிமலையிலேயே மாளிகைப் புறத்து அம்மனாக குடி கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

இருமுடி தத்துவம்

பெற்ற தாயும், தந்தையும் சொத்து சுகத்தை சேர்த்து வைத்தால் தான், பிள்ளைகள், அவர்களை ஏறிட்டுப் பார்க்கும் இந்த கலி காலத்தில்,தனக்கு துரோகம் செய்த தாய்க்கு கூட சேவை செய்தவர் சபரிமலை ஐயப்பன். ஆம்! தனக்கு தலை வலிப்பதாகவும், அதற்கு மருந்து புலிப்பால் என்று தாய் நாடகமாடியும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் தன்னை வளர்த்த அவளுக்காக புலிகளைக் கொண்டு வந்தவர் அவர்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் கூட,கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து சபரிமலைக்கு சென்றவர்கள் ஆயிரம் பேர் கூட இருக்காது; அதற்கு முந்தைய காலங்களில், நூறு பேர் வரை தான் சென்றுள்ளனர். அப்போதெல்லாம் வாகன வசதி இல்லாததால், தாங்கள் புறப்படும் ஊரில் இருந்தே நடந்து சென்று, எருமேலியில் இருந்து பெரிய பாதையில் சென்று வணங்கி வந்தனர் பக்தர்கள்.

இன்று, சபரிமலை சுற்றுலா மையம் போல ஆகிவிட்டது. காலையில் மாலை போடுவது, மாலையில் மலைக்குச் சென்று விடுவது,பம்பைக்குச் சென்ற பிறகு, அங்கு மாலை அணிவது,  அதையும்,இருமுடியையும் காட்டி, 18ம் படியில் ஏறுவது என முறையற்ற விதத்தில் ஐயப்பனை வழிபடச் செல்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் மிகப்பெரிய தியாகி. 12 வயது வரையே வாழ்வதென விரதம் எடுத்து, சாஸ்தாவின் அவதாரமாக பூமிக்கு வந்தவர். ராஜசேகர பாண்டியன் என்ற சாஸ்தா பக்தர், தனக்கு சாஸ்தாவே குழந்தையாகப் பிறக்க வேண்டும் என வேண்டினார். அவருக்கு அருள்பாலித்த சாஸ்தா, கலியுகத்தில்,ஐயப்பன் என்ற பெயரில் அவரது பிள்ளையாவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த பிறவியில் பந்தள மன்னராக பிறந்தார் ராஜசேகரன். காட்டுக்கு வேட்டை யாடச் சென்ற மன்னருக்கு பிள்ளையாகக் கிடைத்தார் சாஸ்தா. குழந்தையில்லாத மன்னர், அவரது கழுத்தில் கிடந்த மணியைப் பார்த்து, “மணிகண்டன்’ என்ற பெயர் சூட்டி வளர்த்தார். மணிகண்டன் வந்த நேரத்தில், மன்னருக்கும் குழந்தை பிறந்து விட்டது; இருந்தாலும், தனக்கு பின், மணிகண்டனுக்கே முடிசூட்ட விரும்பினார் மன்னர்.

இதை விரும்பாத சிலர், ராணியிடம் அவளுக்கு பிறந்த மகனுக்கே முடிசூட்டும்படி வலியுறுத்தினர். ராணியும் மனமாற்றமடைந்து, ஐயப்பனை காட்டுக்கு அனுப்பி, புலிப்பால் கொண்டு வர பணித்தாள்.
சிவ, விஷ்ணுவின் பிள்ளையான சாஸ்தாவின் அவதாரமான ஐயப்பனுக்கு இந்திரனும், மற்ற தேவர்களும் புலியாக மாறி அவருடன் வந்து உதவினர். யாராலும் செய்ய இயலாத இந்த அற்புதத்தைக் கண்டு நடுங்கிப் போன ராணியும், ராஜாவும் அவர் யார் என கேட்க, அவர் சாஸ்தாவாக காட்சி தந்தார். தான் வந்த கடமை முடிந்து விட்டதாகச் சொல்லி,  சபரிமலைக்குச் சென்று தவத்தில் அமர்ந்து விட்டார். அவர் இருந்த இடத்தில் பந்தள மன்னர் ஒரு கோவில் கட்டினார்.

தன் வளர்ப்புத் தாய்க்காக தியாகம் செய்தவரும், தன் பக்தனின் கோரிக்கைக்காக அவருக்கே பிள்ளையாக வந்தவருமான மணிகண்டனைக் காண நாமெல்லாம் செல்ல வேண்டும். குறிப்பாக, முதன் முதலாக கோவிலுக்குச் செல்லும் கன்னி சுவாமிகள், கார்த்திகை முதல் தேதி மாலையணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து மண்டல பூஜையன்று அங்கிருக்குமாறு செல்ல வேண்டும்;மற்றவர்கள், கார்த்திகையில் தங்களுக்கு வசதிப்படும் நாளில் சென்று வரலாம்.

அங்கு சென்று வந்தபிறகு, மீண்டும் தீய பழக்கங்களுக்கு ஆளாகி விடாமல்,நாம் பெற்ற விரதப் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் ஐயப்பனின் பேரருள் நமக்கு கிடைக்கும். 

எண் திசை சாஸ்தா!

சிதம்பர நடராஜர் ஆலயத்தில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர். எட்டுத் திசைகளிலும் அத்தலத்தை சாஸ்தா வலம் வருகிறார் என்பது ஐதீகம். அந்த எண்திசை சாஸ்தாவின் பெயர்கள்: மகா சாஸ்தா,ஜகன்மோக சாஸ்தா, பால சாஸ்தா,ராக சாஸ்தா, தர்ம சாஸ்தா (ஐயப்பன்),விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா,ருத்ர சாஸ்தா.

இருமுடி கட்டாமல்…சபரிமலையில், இருமுடி கட்டாமல் 18படி ஏற ஒரே ஒரு குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், பந்தளம் அரச குடும்பத்தின் வாரிசுகள். பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்தார். மகனை பார்க்க பெற்றோருக்கு அனுமதி தேவையில்லை என்பதால்,  நேரடியாக18 படிகளின் மீது ஏறி ஐயப்பனை தரிசிக்க இவர்களுக்கு விதிவிலக்கு உள்ளது.

இருமுடி தத்துவம்!
பரம்பொருளான பரமாத்மாவிடமிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மா, மீண்டும் பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதே ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு செல்லும்போது இருமுடி கட்டுவதன் தத்துவம்.


இருமுடி சுமந்து, காட்டுப் பாதையில் நடக்கையில், நமது புண்ணிய மூட்டையாக கருதப்படும் பகவானுக்குரிய முன் முடி அப்படியே இருக்கும். வழிப்பயணத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பின் முடி மட்டும் நமது பாவ வினைகள் கரைவது போல குறைந்து கொண்டே வரும். நாம் சேர்த்திருக்கும் புண்ணியங்கள் பயன்படுவது போல,நாம் சுமந்து வந்த இருமுடியில் புண்ணியமூட்டையான முன் முடி, நாம் கொண்டு வந்த பொருட்கள் குருசாமி கையால் பிரித்தெடுக்கப்பட்டு, நெய் அபிஷேகம் உட்பட அனைத்து அபிஷேக ஆராதனைகளும் ஐயப்பனுக்கு செய்விக் கப்படுகின்றன. இதுவே ஸ்ரீசபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டுவதன் தத்துவம்.

ஸ்வாமி ஐய்யப்பன்

கேரளாவில் பந்தள மகாராஜா  குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷிஎன்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவசிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்) ஐயப்பன் பிறந்தார்.

குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும். தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா?
பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே
பரந்தாமனும், பரம்பொளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.

வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக்
கண்டான். "ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா" என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை
கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன்
என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால்
அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ
எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.

தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை 'புலிப்பால்' குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

ஐயப்பன் அறிய மாட்டானா
உண்மையை! தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி
வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது.
தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.

புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.

மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில்
அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டுகட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது. 

ஐயப்பனைக்காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.