விரைவில் இளவரசி கருவுற்றாள். மிகச் சரியாக 14-01-1095ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. சபரிமலை ஐயப்பனின் அருளால் பிறந்த குழந்தை என்பதனால், அக்குழந்தைக்கு "ஆர்யன்" என்ற பெயர் சூட்டினார்கள். (ஆர்யன் என்பது சாஸ்தாவின் நான்கு முக்கியமான பெயர்களில் ஒன்று; மரியாதைக்குரியவன் என்று பொருள்). தன் லட்சியத்தை நிறைவேற்றப் போகும் தவப்புதல்வன் என்ற எண்ணத்தில் ஜயந்தன், மிகச்சிறிய வயதிலேயே தன் மகனுக்கு ஆன்மீகம், அரசியலோடு, போர்க்கலைகளையும் கற்றுக் கொடுத்தான். ஆச்சர்யப்படும் விதத்தில், பாலகனான அச்சிறுவன் ஆன்மீக அறிவில் அபரிமிதமான ஞானத்துடனும், அதே சமயம் சண்டைப்பயிற்சியில் வெல்ல முடியாத வீரனாகவும் விளங்கினான். ஆர்யன் ஒரு சாமான்ய பிறவியல்ல என்பதை அவன் தாய் தந்தையர் வெகு விரைவில் உணர்ந்து கொண்டார்கள்.
இனியும் அவனை இந்த காட்டில் வைத்திருப்பது சரியாகாது என்று முடுவெடுத்த ஜயந்தன், பந்தள மன்னனுக்கு ஒரு கடிதம் எழுதி, ஆர்யனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். ஆர்யனின் மாமனான பந்தள மன்னன், கடிதத்தில் வாயிலாக எல்லா உண்மைகளையும் அறிந்தான். இறந்து விட்டதாக கருதிய தன் சகோதரி இன்னும் உயிருடன் இருப்பதையும், அவள் பிள்ளை கண்முன் வந்திருப்பதையும் கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டான். ஆர்யனின் தோற்றப் பொலிவே அபாரமாக இருந்தது; யாருக்கும் அவன் சிறுவன் என்ற எண்ணமே தோன்றவில்லை. மாறாக மரியாதையே ஏற்பட்டது. அரண்மனையிலேயே தங்கிய ஆர்யன், அரண்மனை வீரர்களையும் மல்லர்களையும் சர்வசாதாரணமாக வென்றது மன்னரிடத்தில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. தன் படையின் முக்கியமான தலைமைப் பொறுப்பினை ஆர்யனுக்குக் கொடுத்தான் மன்னன்.
ஆர்யன் - கேரள வர்மன்
அரண்மனையின் வளர்ந்து வந்த ஆர்யன், தன் செயற்கரிய செயல்களால் அனைவர் மனத்தையும் வென்று விட்டான். அரசனும், தனக்கு பிறகு பந்தள நாட்டை ஆளும் தகுதி ஆர்யனுக்கே உள்ளது என முடிவு செய்து, அவனையே இளவரசனாக அடையாளம் காட்டினான். அரச ப்ரதிநிதியாக நாட்டை ஆளும் பொறுப்பையும் அனைத்து அதிகாரங்களையும் ஆர்யனுக்கே அளித்தான். அத்துடன் அரச அதிகாரம் கொண்டவன் என்ற முறையில் "கேரள வர்மன்" என்ற அரச பட்டத்தையும் அளித்து, "ஆர்ய கேரள வர்மன்" என்று போற்றினான். மக்கள் அனைவருக்கும் எளியனாக விளங்கிய ஆர்யனை, எல்லோரும் ஐயன் - ஐயப்பன் என்றே செல்லமாகவும், மரியாதையாகவும் அழைத்தார்கள். (இது ஏற்கனவே சபரிமலையில் உள்ள தர்மசாஸ்தாவின் மற்றொரு பெயர்தான். அந்த காலகட்டத்தில் ஐயப்பன் என்பது ஒரு செல்லப்பெயர்)
அரசாட்சியில் முழுமையாக ஈடுபட்டு நாட்டை செம்மை படுத்திய ஐயப்பன், அவ்வப்போது சபரிமலைக் காட்டுக்குத் தனிமையை நாடிச் சென்று, தன் பிறவியின் லட்சியத்தை எண்ணி த்யானம் செய்து பொழுதை கழிக்கலானார்.
No comments:
Post a Comment