சேர்த்தலை எனும் ஊருக்கு வந்த ஐயப்பன், அங்கே களரி எனும் யுத்தப்பயிற்சி தந்த சிறப்பன்சிறா மூப்பன் என்பவரை சந்தித்து அவரது ஆதரவையும் பெற்றார். மூப்பனின் மகள், கட்டிளம் காளையான ஐயப்பன் மேல் காதல் கொண்டாள். இதனை அறிந்த ஐயப்பன் அவளிடம் தன் வாழ்கை லட்சியத்தை எடுத்துரைத்து அவள் மனதை மாற்றினார். யோகியான ஐயப்பனின் அறிவுரை அவளை ஆன்மீக ரீதியாக பக்குவப்படுத்தியது. இதற்கிடையில் ஐயப்பனின் படைபலம் பெருகிக்கொண்டே வந்தது.
உதயணனுக்கு எதிராக, ஐயப்பன் தன் படைகள் முழுவதையும் எருமேலியை நோக்கி திரட்டினார். எருமேலியிலிருந்து வாவரின் தலைமையில் முதல் தாக்குதல் துவங்கியது. ஆனால் து எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உதயணன் மூப்பனின் பெண்ணை தந்திரமாக கடத்திக் கொன்றுவிட்டான். உடனடியாக தன் படைகள் முழுவதையும் திரட்டிய ஐயப்பன், படைவீரர்கள் அனைவருக்கும் எருமேலி முதல் சபர்மலை வரையிலான மலைகளின் மகத்துவத்தை உரைத்தார். முறையான விரத அனுஷ்டானம் இல்லாமல் சாஸ்தாவின் பூங்காவனத்துக்குள் செல்லக் கூடாது என கட்டளையிட்டார்.
ஐயப்பனின் கட்டளைப்படி படைவீரர்கள் அனைவரும் 56 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டார்கள். இதன் பின்னர் அனைவரும் மீண்டும் எருமேலியில் கூடினார்கள். தங்கள் வெற்றிக்காக கிராத சாஸ்தாவை வழிபட்ட ஐயப்பன், போர்ப்படைகளை வழிநடத்தலானார். தாக்குதல் குறித்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, காட்டுவாசிகளைப் போல வேடமிட்டு யாவரும் செல்லலானார்கள். (இன்றைய பேட்டை துள்ளல்; அன்று கடைசியாக வந்த ஆலக்காட்டு படையின் நினைவாக இன்றும் ஆலங்காட்டு பேட்டை துள்ளலே கடைசி பேட்டை துள்ளல்)
உதயணனைத் தாக்கும் முன்பு போர்ப்படைகளை மூன்றாக பிரித்தார் ஐயப்பன்.
1. ஆலக்காட்டு படைகளை வாவரின் தலைமையிலும்
2. அம்பலப்புழை படைகளை கடுத்தனின் தலைமையிலும்
3. பந்தளப்படைகளை வில்லன் - மல்லன் இருவரின் தலைமையிலும் அணிவகுத்தார்.
மூன்று படைகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஐயப்பன் தானே ஏற்றார். உதயணனின் இருப்பிடத்தை கிழக்கு, வடக்கு தெற்கு என மூன்று பக்கங்களிலிருந்தும் வளைக்கலானார்கள்.
No comments:
Post a Comment