Wednesday, 25 November 2015

படைகள் பல

பாண்டிய அரச பரம்பரையின் மற்றொரு கிளை வம்சமான பூஞ்சாறு ராஜ்ய வம்சத்து அரசனான மானவிக்ரம பாண்டியன், வண்டிப்பெரியாறு வனப்பகுதிக்கு வந்த போது, உதயணனின் படை மானவிக்ரமனைச் சூழ்ந்து கொண்டது. தன்னால் ஆனமட்டும் போராடிய மானவிக்ரமன், ஒரு கட்டத்தில் ஏதும் செய்ய முடியாமல், மீனாட்சியம்மனை வேண்டி நின்றான். வெகு விரைவிலேயே, அவன் வேண்டுதல் பலித்ததைப் போல ஒரு இளைஞர் யானை மேல் வந்து கொண்டிருந்தார். வனத்தில் திரிந்து கொண்டிருந்த காட்டானை ஒன்றை அடக்கி அதன் மேல் வந்து கொண்டிருந்தது -  ஐயப்பன் தான். தன் அநாயாசமான போர் திறமையால் கொள்ளையர்களை விரட்டியடித்த ஐயப்பன், மானவிக்ரமனை காப்பாற்றினார். மீண்டும் தைரியமாக அரண்மனைக்கு செல்லும்படி கூறிய ஐயப்பன், அரசனுக்கு துணையாக, தன் ப்ரதிநிதியாக ஒரு பிரம்பு- வடியை கொடுத்து அனுப்பினார்.  (இன்றும் பூஞ்சாறு ராஜ வம்சம் இதனை ஒரு பொக்கிஷமாக காப்பாற்றுகிறார்கள்)

இப்படியாக பதினான்கு வயதுக்குள் ஐயப்பன் தான் ஒரு போர்வீரனாகவும், யோகியாகவும் விளங்கி தான் சாதாரணமான மனிதனல்ல என்று உணர்த்திவிட்டார். எனவே தன் பிறவி லட்சியத்தை நிறைவேற்ற வேளை வந்துவிட்டதை உணர்ந்தார். உதயணனை அழிக்கவும், சபரிமலை கோவிலை மீண்டும் உருவாக்கவும் - பந்தளத்தின் படைபலம் போதாது; எனவே பெரும் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார் ஐயப்பன். நாட்டின் குடிமக்கள் அனைவரும் வீட்டிற்கு ஒருவரை போருக்கு அனுப்ப அறைகூவல் விடுத்தார்.

லட்சியம்

ஐயப்பனின் லட்சியம் மிகத் தெளிவாக இருந்தது:

- உதயணனின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டுவது;

- மக்களுக்கு நிம்மதியான வாழ்வினை அளிப்பது;

- எரிந்து போன சபரிமலைக் கோவிலை மீண்டும் உருவாக்குவது.

இதற்காக அண்டை நாடுகளுக்கும் சென்று ஐயப்பன் படை திரட்ட முடிவு செய்தார். காயங்குளம், அம்பலப்புழை, சேர்த்தலை, ஆலங்காடு போன்ற கேரளப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பாண்டிய நாட்டின் உதவியையும் வேண்டி ஐயப்பன் பயணம் செய்ய திட்டமிட்டார்.

முதன் முதலில் ஐயப்பன் காயங்குளம் அரண்மனைக்கு சென்றார். காயங்குளம் அரசர், தான் தினம் தினம் கேள்விப்படும் தெய்வப்பிறவியை நேரில் கண்ட மகிழ்ச்சியில் மெய்மறந்து நின்றார். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார் மன்னர். காயங்குளம் ராஜ்யத்திலிருந்த பல களரி வீரர்களையும், போர் வீரர்களையும் கொண்டு ஐயப்பன் ஒரு போர்ப்படையை தயாராக்கினார்.

படை பலம்

ஐயப்பன் காயங்குளத்திலிருந்து கிளம்புமுன்பே ஒரு தூதன் வந்து, கடல் கொள்ளையனான வாவர் என்பவனின் தொல்லைகளைப் பற்றி எடுத்துரைத்தான். இதனைக் கேட்டு மகிழ்ந்த ஐயப்பன், உற்சாகமாக போருக்கு கிளம்பினார். முல்லசேரி என்ற குடும்பத்தின் தலைவனாக விளங்கிய கார்னவர்(தலைவர்), காயங்குளத்தின் மந்திரியாகவும் விளங்கிய அவர் ஐயப்பனுக்கு துணையாக புறப்பட்டர். நடந்த சண்டையில் வாவரை வென்றார் ஐயப்பன். வாவரின் உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வென்றது ஐயப்பனின் பண்பு. வாவரை நல்வழிப்படுத்தி தன் சீடனாகவும், தோழனாகவும் ஏற்ற ஐயப்பன், வெகு விரைவில் படைகளை திரட்டலானார். 

புல்லுக்குளங்கரா என்ற இடத்தில் தன் முதல் போர்ப்படை கூட்டத்தை கூட்டி, படை வீரர்களிடையே சொற்பொழிவாற்றினார். (இந்த இடமும் இன்னும் இருக்கிறது)

இதே போல அம்பலப்புழை சேர்த்தலை போன்ற ஊர்களிலும் படைகலை திரட்டினார். நாட்டில் எங்கெங்கு சிறந்த வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஐயப்பனுக்கு கட்டுப்பட்டு வந்தார்கள். மலைகளில் புகுந்து தாக்குவதில் வல்லவனான கடுத்தன் என்ற வீரனிடம்  ஐயப்பனின் பார்வை பட்டது. பலமுறை உதயணனைத் தாக்கி, சிறைபட்ட பல மன்னர்களை மீட்டுள்ள கடுத்தனை தன் லட்சியத்துக்கு துணையாக அழைத்தார் ஐயப்பன். 

அதே போல வில் வித்தையில் சிறந்து விளங்கிய ராமன் - க்ருஷ்ணன் என்ற இருவரும் (தலைப்பாறை வில்லன் - மல்லன்) ஐயப்பனுக்கு துணை நின்றார்கள்.


No comments:

Post a Comment