Thursday, 26 November 2015

லட்சியம் வென்றது

எருமேலியிலிருந்து பூங்காவனத்துக்குள் நுழைந்தது முதலாகவே ஐயப்பன் முற்றிலும் வேறொரு நபராக காட்சியளித்தார். அவரது தோற்றமே மிகப் பொலிவுடன் காணப்பட்டது; முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ  மிக அமைதியான கோலத்துடன், அதே சமயம் ஆனந்தக் கோலத்துடன் முன்னேறினார். ஐயப்பன் ஒரு ஆயுதத்தையும் கையால் கூட தொடவில்லை; அவர் முன்னேற முன்னேற அவரைத் தொடர்ந்து சென்ற படைகளும் எதிரிகளை எளிதாக வீழ்த்தி வெற்றிகளைக் குவித்த வண்ணம் முன்னேறியது. 

உதயணனின் கொள்ளைப்படைகளின் கூடாரமாக இருந்த இஞ்சிப்பாறை, கரிமலை, உடும்பாறை ஆகியவை வெகுவிரைவிலேயே ஐயப்பன் படையின் வசமானது. 

ஐயப்பனின் வீராவேசமான படைகளுக்கு முன் உதயணனின் படைகளால் நிற்கவே முடியவில்லை. ஐயப்பனின் படை வெகு வேகமாக முன்னேறி உதயணனின் படைகளை தவிடுபொடியாக்கியது. இறுதியாக கரிமலைக் கோட்டையில் தஞ்சம் புகுந்தான் உதயணன். கடுமையானதொரு யுத்தத்துக்குப் பிறகு கடுத்தன் ஆக்ரோஷமாக முன்னேறி உதயணனின் கழுத்தை வெட்டி வீழ்த்தினான். ஐயப்பனின் லட்சியம் நிறைவேறியது. 

பல்லாண்டுகால போராட்டத்தின் வெற்றிக்குப்பிறகு படைகள் முழுவதும் ஆனந்தமாக பம்பையாற்றங்கரையில் கூடினார்கள். ஐயப்பன் அங்கு, போரில் இறந்த அனைவருக்கும் இறுதிச்சடங்குகள் செய்து தர்ப்பணம் செய்யச் சொன்னார். எதிரியே ஆனாலும், உதயணனின் ஆட்களுக்கும் தர்ப்பணம் செய்யப்பட்டது.

மேற்கொண்டு படைகள் அனைவரும் நீலிமலையைக் கடந்து செல்லத்துவங்கினார்கள். அப்போது அனைவரையும் நிறுத்திய ஐயப்பன், ஆலயப்பகுதிக்குள் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக்கூறி, அம்பு, கத்தி, கதை என எல்லா ஆயுதங்களையும் ஓர் ஆலமரத்தின் கீழே வைத்துவிடச் சொன்னார். (பண்டைய சரங்குத்தி ஆல்)

No comments:

Post a Comment